News
ஜீ தமிழ் பாடகி ரமணி அம்மாள் காலமானார்.!
நாட்டுப்புற பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணியம்மாள் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
ராக் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரமணி அம்மாள் இன்று காலமானார். 69 வயதான அவர் வயது முதிர்வு காரணமாகவும், உடல் நலக்குறைவால் ஒரு வருடத்திற்கும் மேலாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து, விஜே அர்ச்சனா உட்பட பல பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 1954 ஆம் ஆண்டு பிறந்த ரமணி அம்மாள், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆர்கெஸ்ட்ராக்களில் பாடி, ‘காத்தவராயன்’ மற்றும் ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு பெற்றார்.
இருப்பினும் ஜீ தமிழில் ச ரே கா மா சீனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் அவர் மிகவும் பிரபலமானார். பின்னர் அவர், ஜுங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாட அவருக்கு வாய்ப்புகள் அளித்தது. பா.ரஞ்சித் தயாரித்து, யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை நாயகி’ படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
